12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-10-20 22:15 GMT
திருவாரூர்,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்த நிவாரண தொகையான ரூ.50 லட்சத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர், டிரைவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்கிற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசோக் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதான துறை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்