புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டை வருகை - முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை தருகிறார். முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-10-20 22:15 GMT
புதுக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை(வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். விராலிமலையில் ஜல்லிக்கட்டில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதன்நினைவாக விராலிமலையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்று நிறுவப்பட்டுள்ள வெண்கல சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர், தமிழக மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மிக முக்கிய அங்கமான 1,088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை அவர் பார்வையிடுகிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைக்கான ‘கேத் லேப்’ வசதியை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன நிர்வாகிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்பு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக விராலிமலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது விராலிமலை ஒன்றிய, நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வரும் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கவிநாடு கண்மாய் குளத்தில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் ரெத்தினசபாபதி, ஆறுமுகம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து, கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர் பங்கேற்கும் முதல் சுற்றுப்பயண நிகழ்ச்சி இது என்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்