ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் 12 ஏ.டி.எம்.களில் பகலில் நிரப்பிய பணத்தை நள்ளிரவில் திருடி கைவரிசை - தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் 12 ஏ.டி.எம்.களில் பகலில் நிரப்பிய பணத்தை இரவில் திருடி கைவரிசை காட்டிய தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-21 06:00 GMT
திண்டுக்கல்,

தேனி ஜெயம்நகரில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும், தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தினர் திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின், ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவது மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணிக்கு அழகுராஜா (வயது 31) என்பவர் பொறுப்பு அதிகாரியாக உள்ளார்.

மேலும் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த கொத்தப்புளியை சேர்ந்த தெய்வேந்திரன் (21), பழனி அருகே உள்ள பச்சலநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (21) ஆகியோர் பணம் நிரப்பும் ஊழியர்களாக வேலை செய்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களை திறந்து பணம் நிரப்பி விட்டு, மீண்டும் பூட்டுவதற்கு வசதியாக 2 பேருக்கும் தனித்தனியாக ரகசிய குறியீடு வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் பணம், வாடிக்கையாளர்கள் எடுத்த பணம் ஆகியவற்றை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அதில் 12 ஏ.டி.எம். எந்திரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த (அக்டோபர்) மாதம் வரை மொத்தம் ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 500 மாயமானது தெரியவந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம், தனியார் நிறுவன அதிகாரி அழகுராஜா புகார் கொடுத்தார்.

அந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர்பவுல்ராஜ், தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணம் மாயமான 12 ஏ.டி.எம். மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஏ.டி.எம். எந்திரங் களில் பணம் நிரப்பும் ஊழியர்களான தெய்வேந்திரன், சக்திவேல் ஆகியோர் நள்ளிரவில், மையங்களுக்கு வந்து செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பகலில் பணத்தை நிரப்பி விட்டு நள்ளிரவில் சென்று ரகசிய குறியீட்டை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணத்தை திருடி உள்ளனர். மேலும் மொத்தமாக திருடினால் சிக்கிக் கொள்ளலாம் என்பதால், சிறிது, சிறிதாக அவர்கள் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்