விவசாய மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது - காட்பாடி அருகே பரபரப்பு

காட்பாடி அருகே விவசாய மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-10-21 13:01 GMT
திருவலம்,

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் ரிஷிகேஷ் (வயது 25), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வள்ளிமலை அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தார்.

இதுகுறித்து ஆய்வு செய்த காட்பாடியை அடுத்த கார்ணாம்பட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் (53) என்பவர், மின் இணைப்பு தருவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு ரிஷிகேஷ் தயங்கியுள்ளார். பின்னர் இறுதியாக ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக கார்த்திகேயன் கேட்டுள்ளார். இதனை தர விரும்பாத ரிஷிகேஷ் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று ரிஷிகேஷிடம், ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இதன் பின்னர், ரிஷிகேஷ், கார்ணாம்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனிடம், ரசாயனம் தடவிய பணத்தை தந்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திகேயனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து பணத்தையும் கைப்பற்றினர்.

பின்னர் கார்த்திகேயனை வேலூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் காட்பாடி மற்றும் கார்ணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்