பேரணாம்பட்டில் இட்லி கடையில் தகராறு செய்த முதியவர் கொலை - வாலிபர் கைது

பேரணாம்பட்டில் இட்லி கடையில் தகராறு செய்த முதியவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-21 14:11 GMT
பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 45). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அருகில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க. நகர் சோழன் வீதியை சேர்ந்த பீடி தொழிலாளி அண்ணாதுரை (65) என்பவர் மது போதையில் ஜெயந்தியின் கடைக்கு சென்று இட்லி, பூரி என்ன விலை என கேட்டுள்ளார்.

ஜெயந்தி இட்லி, பூரியின் விலையை கூறியிருக்கிறார். விலையை கேட்ட அண்ணாதுரை தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஜெயந்திக்கும், அண்ணாதுரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஜெயந்தியை அண்ணாதுரை ஆபாசமான வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த ஜெயந்தியின் மகன் ஹரிஷ் (25) என்பவர் எப்படி எனது அம்மாவை அசிங்கமான வார்த்தையால் திட்டலாம் என தட்டிக் கேட்டு, அண்ணாதுரையின் மார்பில் கையால் குத்தி கீழே தள்ளி இருக்கிறார். இதில் அண்ணாதுரை மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அண்ணாதுரையின் மருமகன் முனுசாமி என்பவர் தனது மாமனார் மயங்கி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அண்ணாதுரையை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் முனுசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அண்ணாதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஹரிசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்