பண்ணாரி அருகே காட்டு யானைகளை கண்டு பயப்படாமல் நின்றவரால் பரபரப்பு

பண்ணாரி அருகே காட்டு யானைகளை கண்டு பயப்படாமல் நின்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-21 20:58 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான்கள், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அங்குள்ள ரோட்டை கடந்து செல்வது வழக்கம்.

குறிப்பாக சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனை சாவடி பகுதிக்கு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் யானைகள் அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை மறித்து அதில் இருந்து கரும்புகளை துதிக்கையால் இழுத்து தின்று வருகின்றன.

பயப்படாமல் நின்றவர்

அதன்படி வழக்கம்போல் நேற்று 2 யானைகள் ஒரு குட்டியுடன் பண்ணாரி சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வருகின்றனவா? என பார்த்த வண்ணம் யானைகள் வந்தன. யானைகளை கண்டதும் அந்த வழியாக வந்த வாகனங்கள் அப்படியே நின்று விட்டன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து வரிசையான நின்றன.

அப்போது அங்குள்ள ரோட்டில் ஒருவர் தனது தோளில் பையுடன் முறைத்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். யானைகளை கண்டதும் அந்த பகுதியில் நின்றவர்கள், சத்தம் போட்டு அவரை அங்கிருந்து ஓடிவிடும்படி கூறினர். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அங்கேயே பயப்படாமல் நின்று கொண்டிருந்தார். இதனால் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ என அச்சத்தில் அங்கிருந்தவர்கள் அந்த ‘திக் திக்’ காட்சிகளை திகைப்புடன் பார்க்க தொடங்கினர்.

உயிர் தப்பினார்

யானைகள் மிக அருகில் நெருங்கி வருவதை கண்டதும் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனே அவர் அங்கிருந்து வேக வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அந்த நபரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இந்த காட்சிகளை அங்கிருந்த வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். இதுகுறித்து அந்த வாகன ஓட்டி கூறுகையில், ‘யானைகளிடம் இருந்து அவரை பண்ணாரி அம்மா நீதான் காப்பற்ற வேண்டும் என வேண்டினேன். யானைகளிடம் இருந்து அவர் தப்பித்ததால் என்னுடைய வேண்டுதல் வீண்போகவில்லை,’ என சந்தோஷமாக கூறினார்.

மேலும் செய்திகள்