காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி

புதுச்சேரியில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2020-10-21 22:40 GMT
புதுச்சேரி,

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

புதுவையில் கடந்த ஆண்டு 8 பேர் உயிர்நீத்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது.

முதல்-அமைச்சர் அஞ்சலி

நிகழ்ச்சிக்கு புதுவை போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா தலைமை தாங்கி பணியின்போது உயிரிழந்த போலீசாரின் பெயர்களை வாசித்தார். இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முப்படையை சேர்ந்த அதிகாரிகள் காவலர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி காவலர்களுக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்