ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, நாராயணசாமி கோரிக்கை

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார்.

Update: 2020-10-21 22:46 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறைந்து வருகிறது. வருகிற நாட்கள் பண்டிகை காலம் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இப்போது 95 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து வெளியே வருகிறார்கள். மீதமுள்ளவர்களும் முகக்கவசம் அணியவேண்டும். சண்டே மார்க்கெட்டில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இது அதிர்ச்சி அளிக்கிறது.

புதுவையில் விரைவில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்போது அங்குள்ள கடைகள் பெரிய மார்க்கெட்டிற்கு மாற்றப்படும். அந்த நேரத்தில் பெரிய மார்க்கெட்டின் 13 வாசல் பகுதிகளிலும் கிருமிநாசினி, சோப்பு, கைகழுவ தண்ணீர் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை

மத்திய அரசு பல்வேறு சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையே புதுவையில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி பல லட்சம் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபோன்ற சூதாட்டங்களினால் பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். எனவே இதுபோன்ற சூதாட்டங்களை தடை செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இதுதொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுத உள்ளேன்.

கடந்த 2020-21 பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். புதுவை விவசாயிகளுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு கடன் கொடுக்க வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். பால் வளத்தை பெருக்க கறவை மாடுகள் வாங்க குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வரை ஜாமீன் கேட்காமல் கடன் வழங்க கூறியுள்ளேன். கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.35 கோடி கடன் கொடுக்க கூறினேன். அதில் 90 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளுடன் இணைந்து ரூ.3 ஆயிரம் கோடி திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம்.

குண்டர் சட்டம்

புதுவையில் நடந்த சில கொலைகளில் சிறைக் கைதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சிறையில் இருந்துகொண்டு செல்போன் மூலம் வெளியில் உள்ள ரவுடிகளை தொடர்புகொண்டு காண்டிராக்டர்களை மிரட்டி பணம் பறிக்க நடவடிக்கை எடுக்கிறார் கள். இது கடந்த கால ரங்கசாமி ஆட்சியிலும் நடந்தது. அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் 29 ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தோம்.

இப்போது பலமுறை சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறை வார்டன்களும் உதவி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். அவர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ரவுடிகள் விஷயத்தில் காவல்துறையானது மென்மையான போக்கினை கடைபிடிப்பதில்லை. இருந்தபோதிலும் காவல்துறையில் உள்ள புல்லுருவிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்