புதுவையில் இன்று முதல் தனியார் பஸ் போக்குவரத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2020-10-21 22:56 GMT
புதுச்சேரி,

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து புதுவையில் மாமூல் வாழ்க்கை மெல்ல திரும்பியது. பஸ் போக்குவரத்தும் தொடங்கியது. அதாவது புதுவை நகருக்குள் 7 அரசு பஸ்களும், காரைக்காலுக்கு 2 அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்களை இயக்க அதன் உரிமையாளர்கள் மறுத்து விட்டனர்.

தமிழகத்தில் பஸ் போக்கு வரத்து தொடங்கிய நிலையில் புதுவை வழியாக செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. பயணிகளை இறக்கவோ ஏற்றவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாநில எல்லையான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, கன்னியகோவில் வரை மட்டுமே பஸ்கள் வந்து செல்கின்றன.

தனியார் பஸ்கள் இயக்கம்

இந்தநிலையில் புதுவை மாநிலத்திற்குள் தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பாக நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் பேச்சுவார்த்தை நடந்தது. முதல்- அமைச்சர் நாராயணசாமியிடம், தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாரதி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் ஷாஜகான் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பேச்சுவார்த்தையின் போது, தனியார் பஸ் உரிமையாளர்கள் கடந்த 6 மாதத்திற்கான சாலைவரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை தள்ளுபடி செய்வதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார். இதையடுத்து உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) முதல் புதுச்சேரிக்குள் பஸ்களை இயக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் உறுதியளித்தனர். தமிழக பகுதிக்கு பஸ்களை இயக்கவும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை

இது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

புதுவை மாநிலத்துக்குள் இன்று முதல் பஸ்களை இயக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மதித்தனர். புதுவையில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும்.

புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி கடைகள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி மீண்டும் பெரிய மார்க்கெட்டிற்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளோம். இன்னும் 3 நாட்களுக்குள் புதுவை காய்கறி கடைகள் மீண்டும் பெரிய மார்க்கெட்டிற்கு மாற்றப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறி கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து முதல்-அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது சிவா எம்.எல்.ஏ. புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்