நடப்பாண்டு, கடந்த 21 நாளில் 65 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ் பேட்டி

நடப்பாண்டு, கடந்த 21 நாளில் 65 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-10-21 22:00 GMT
கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட தளிக்கோட்டை, மேலநெம்மேலி மற்றும் மன்னார்குடி கீழ்ப்பாலம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். இதில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அரசு முதன்மை செயலாளர் தயானந்த கட்டரியா, நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி, மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக கடந்த ஆண்டு பருவத்தில் 32 லட்சத்து 42 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த பருவம் தொடங்கிய கடந்த 21 நாட்களில் 65 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு நிகழ்வாகும். திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 90 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. கிட்டத்தட்ட 90 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பத அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தாலும், இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிப்பு அடைந்து விட கூடாது என்பதனை கருத்தில் கொண்டு ஈரப்பத அளவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும் மத்திய அரசிடம் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும் ஒரு நெல் மணி அளவு கூட மிச்சம் வைக்காமல் அரசு கொள்முதல் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மேலாளர்(வாணிபம்) காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், ஆர்.டி.ஓ. புண்ணியகோட்டி, துணை மேலாளர் கான்டீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்