வத்திராயிருப்பு அருகே, கரடி தாக்கியதில் மீனவர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

வத்திராயிருப்பு அருகே கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-10-21 22:15 GMT
வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணையில் வத்திராயிருப்பு மேலத்தெருவை சேர்ந்த ராமச்சந்திரன், பட்டுப்பூச்சி சேர்ந்த ரசூல்தீன், பிளவக்கல் அணையை சேர்ந்த தெய்வேந்திரன் ஆகிய 3 பேரும் பிளவக்கல் அணையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் வழக்கம் போல் அணையில் மீன் பிடித்து விட்டு அணை அருகே உள்ள பகுதியில் ஓய்வெடுப்பதற்காக வந்தனர். அப்போது அணை அருகே திடீரென கரடி ஒன்று இவர்கள் மீது பாய்ந்தது. இதில் ரசூல்தீன் என்பவர் கரடியின் பிடியில் சிக்கிக் கொண்டார்.

உடனே மற்ற இருவரும் சத்தம் போட்டனர். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அவரை கரடி பயங்கரமாக கடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

இதனை பார்த்து பதற்றத்தில் ராமச்சந்திரன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் ரசூல்தீன், ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்