மதுரையில், ஆள்மாறாட்டத்தில் தொழிலாளி கொல்லப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்; உறவினர்கள் மறியல்

மதுரையில் ஆள்மாறாட்டத்தில் கட்டிட தொழிலாளி கொல்லப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-22 05:15 GMT
மதுரை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள முக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. அவருடைய மகன் பாரதி (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் மதுரை வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வீட்டுக்கு கட்டுமான பணிக்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை நடந்தது. அங்கு பாரதி தனது மாமாவுடன் சேர்ந்து வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் ஓட, ஓட விரட்டி, கட்டிட பணி நடைபெறும் வீட்டிற்குள் புகுந்து பாரதியை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இது குறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாரதி ஆள்மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதுதொடர்பாக மதுரை புதூரை சேர்ந்த மாஜித்(வயது 23), சேதுபதி(23), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஹரிகரன்(24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முதுகுளத்தூர் கோர்ட்டில் திருப்புவனத்தை சேர்ந்த பாண்டிவேல்(24), மணிகண்டன்(25), ராம்குமார்(25), ரவி(24) ஆகிய 4 பேர் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பாண்டிவேல் தம்பி கணேஷ்பாண்டியை கடந்த ஆண்டு ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் திருப்புவனத்தை சேர்ந்த வியாசர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். தம்பியை கொலை செய்தவரை பழிதீர்க்க பாண்டிவேல் தரப்பினர் தேடினர். வியாசரை தேடி அலைந்த போது அவரை போன்று தோற்றம் உள்ள பாரதியை ஆள்மாறாட்டத்தில் கொலை செய்துள்ளனர்” என்ற பரபரப்பு தகவலை தெரிவித்தனர்.

இதற்கிடையே பாரதியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்புள்ள பனகல் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்