திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 550 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள் டீன் வள்ளி பாராட்டு

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 550 கிராம் எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவினரை டீன் வள்ளி சத்தியமூர்த்தி பாராட்டினார்.

Update: 2020-10-22 11:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (25). இந்த நிலையில் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் அப்போது 6 மாதம் மட்டுமே கருவுற்றிருந்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டதால் அவருக்கு ஆபரேசன் மூலம் ஆண் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். அப்போது அந்த குழந்தை 550 கிராம் எடை மட்டுமே இருந்தது. எடை குறைவாக குழந்தை பிறந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் தீவிர முயற்சியால் தற்போது அந்த குழந்தையை காப்பாற்றி அவர்களது பெற்றோர்களுடன் நேற்று வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:-

550 கிராம் எடையளவில் பிறந்த ஆண் குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அதன்படி குழந்தைக்கு மூச்சுத்திணறலை தவிர்க்க வெண்டிலேட்டர் வசதி செய்யப்பட்டது. மேலும், அதன் நுரையீரலை பலப்படுத்தும் வகையிலும், அதன் வளர்ச்சிக்காகவும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதுபோல் தாய்ப்பால் பருகுவதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வழங்கப்பட்டது.

தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இதன் எடை தற்போது 1.5 கிலோ ஆகும். இந்த குழந்தையை காப்பாற்ற சிகிச்சை அளித்த டாக்டர்கள் பிரியா, தனசேகர், ஐஸ்வர்யா, வரதராஜ், ராஜேஷ், தனபால், பொன் சிலம்பாயி, திவ்யா ஆகியோர் கொண்ட குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன்பு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 750 கிராம் மற்றும் 850 கிராம் எடையில் பிறந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 550 கிராம் எடையில் பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த சாதனையை அரசு ஆஸ்பத்திரி நிகழ்த்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்