விழுப்புரம்- திண்டிவனத்தில் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த பலன்களை வழங்கக்கோரி விழுப்புரம், திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-22 11:38 GMT
விழுப்புரம்,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியும் நிரந்தர பேராசிரியர்களுக்கான இணைப்பாணை கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து வழங்கப்படாமலும் அதற்கான நிரந்தர தீர்வு காணப்படாமலும் உள்ளது. அதுபோல் உறுப்புக்கல்லூரி பேராசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த பலன்கள் எதுவுமே வழங்கப்படவில்லை.

மேலும் பணி உயர்வுத்திட்டத்திற்கான அறிவிப்பு 2 முறை வெளியிடப்பட்டும் முதல்முறை வெளியிடப்பட்ட பணி உயர்வுத்திட்ட செயல்பாடுகளே முறையாக நடத்தப்படாமல் பூர்த்தி அடையாத நிலையில் உள்ளது. ஆதலால் ஊதியப்பயன்களும் முறையாக வழங்கப்படவில்லை. அதேபோல் பேராசிரியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பலமுறை அண்ணா பல்கலைக்கழகத்திடம் முறையிட்டனர். இருப்பினும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதனை கண்டித்தும், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகத்தில் 16 இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் 450 பேர், கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் 22 பேராசிரியர்களும் மற்றும் திண்டிவனத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வரும் 22 பேராசிரியர்களும் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள், கல்லூரி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்