சிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட அனுமதி கோர்ட்டு உத்தரவு

சிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அரசு வழிகாட்டுதல் படி நவராத்திரி விழா கொண்டாட அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-22 22:36 GMT
சிவமொக்கா, 

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா சிக்கந்தூரில் பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அறங்காவலராக ராமப்பா இருந்து வருகிறார். அதுபோல் கோவிலின் பூசாரியாக சேஷகிரி பட் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டும் நவராத்திரி விழா நடத்த வேண்டும் என்று பூசாரி கோரிக்கை வைத்தார். ஆனால் கொரோனா பரவி வருவதால் நவராத்திரி விழாவை கொண்டாட அறங்காவலர் ராமப்பா மறுப்பு தெரிவித்து வந்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் இது கோஷ்டி மோதலாகவும் மாறியது.

கோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பக்தர்களான சந்தீப் ஜெயின், நவீன் ஜெயின் ஆகியோர் சாகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், சவுடேஸ்வரி அம்மன் கோவிலின் அறங்காவலர் ராமப்பா, அவரது மகன் ரவிக்குமார் ஆகியோர் பூசாரி சேஷகிரி பட் நவராத்திரி விழாவையொட்டி ஹோமம் நடத்த இடையூறு செய்து வருவதாகவும், எனவே ஹோமம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

நவராத்திரி விழாவுக்கு அனுமதி

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெலிக்ஸ் அல்போன்சா அந்தோணி, நவராத்திரி விழாவையொட்டி ஹோமம் நடத்தலாம் என்றும், அறங்காவலர் ராமப்பா முன்னிலையில் இந்த ஹோமத்தை நடத்த வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் படி இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அவர் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை கோவில் கருவறைக்குள் ஒரே நேரத்தில் 40 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த உத்தரவை தொடர்ந்து சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அறங்காவலர், பூசாரி இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்