ஆண்டிப்பட்டி அருகே, கோவிலில் நவராத்திரி கொலு வைத்ததில் இருதரப்பினரிடையே மோதல் - 2 பேரின் மண்டை உடைப்பு

ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் நவராத்திரி கொலு வைத்ததில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.இதில் 2 பேரின் மண்டை உடைந்தது.

Update: 2020-10-22 22:15 GMT
ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமுதாயத்தினர் தங்களுக்கு பாத்தியப்பட்டது என்று கூறி வருகின்றனர். இதரபிரிவினர் பொதுவான கோவில் என்று கூறி வருகின்றனர். இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதன்காரணமாக கோவிலில் திருவிழா நடத்த முடியாத நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சக்கம்பட்டியை சேர்ந்த ஒருதரப்பினர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு வைத்து வழிபட்டனர்.

இதனையறிந்த மற்றொரு தரப்பினர் நேற்று கோவில் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் 2 பேரின் மண்டை உடைந்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த ஆண்டிப்பட்டி போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்