எடப்பாடி பழனிசாமிக்கு, 300 மாட்டு வண்டிகளில் வந்து விவசாயிகள் வரவேற்பு

கவிநாடு கண்மாய் ஏரியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 300 மாட்டு வண்டிகளில் வந்து விவசாயிகள் வரவேற்பு கொடுத்தனர்.

Update: 2020-10-22 22:30 GMT
புதுக்கோட்டை,

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐ.டி.சி. நிறுவன விழா, ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு விழா, கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையைத் திறந்து வைத்துவிட்டு புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கவிநாடு கண்மாய் ஏரியில் விவசாயிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடலில் பாதி கவிநாடு கண்மாய் ஏரி என்ற பெயர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமானது. தமிழகத்தில் உள்ள ஏரிகளிலேயே பெரிய ஏரி என்ற பெருமைக்குரிய இந்த கவிநாடு கண்மாய் ஏரி தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனைப் பார்வையிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி வந்தபோது விவசாயிகள் 300 மாட்டு வண்டிகளில் வந்து தயாராக நின்றனர்.அந்த மாட்டு வண்டிகளில் வாழை, கரும்பு மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகளில் அமர்ந்திருந்த விவசாயிகள் அனைவரும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்து இருந்தனர். ஏரியை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டபோது அவரும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.

விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பினால் மகிழ்ச்சி அடைந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் தானும் ஒரு விவசாயியாக நடந்தே சென்றார். அப்போது விவசாயிகள் அவருக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பியபடி ஆரவாரம் செய்தனர். ஒருகட்டத்தில் விவசாயிகள் எடப்பாடி பழனிசாமியிடம் தாங்கள் மாட்டு வண்டியில் ஏறி அமர வேண்டும் என்று கூறினார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி ஒரு மாட்டு வண்டியில் ஏறினார்.அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏறி நின்றார். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்துக்கூறினார். உடனே விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த வண்டியில் கட்டப்பட்டிருந்த காளைமாடுகள் வண்டியை இழுத்துச் செல்ல முயன்றது. இதனால் முதல்-அமைச்சரும், அமைச்சரும் சற்று தடுமாற்றம் அடைந்தனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு சமாளித்தனர். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்