மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-23 03:39 GMT
கரூர், 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு உட்பட்ட பாலராஜபுரம் கணேசநகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் புகார் பெட்டியில் போட்ட மனுவில், எங்கள் பகுதியில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்க அனுமதி கிடைக்கப்பெற்றது.

இதையடுத்து கடந்த மாதம் 14-ந்தேதி அன்று ஊர் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் தாசில்தார், சர்வேயர், கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில், அதற்கு உரிய அரசு நிலமான 8 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு. அதற்கு உரிய அனுமதி கடிதம் பாலராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பணிக்காக நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு பணிகளை தொடங்கியபோது சிலர் பணி செய்ய விடாமல் தடுத்து பொக்லைன் எந்திரத்தை வெளியேற்றி விட்டனர். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை விரைந்து முடித்து தருமாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்