இடி-மின்னலுடன்விடிய விடிய கன மழை: அதிகபட்சமாக வானமாதேவியில் 67 மில்லி மீட்டர் பதிவு

கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் விடிய விடிய கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வானமாதேவியில் 67 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2020-10-23 13:25 GMT
கடலூர்,

வங்க கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. மேலும் அதனோடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கடலூரில் மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது. இதற்கிடையே நள்ளிரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது. இந்த பலத்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே மிகவும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே நள்ளிரவில் பெய்த கனமழையின் போது, கடலூர் நகரில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கொசுத்தொல்லையால் தூங்க முடியாமல் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம்பிள்ளை தெருவில் சாலையோரம் இருந்த மரம் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

இதேபோல் பண்ருட்டி, வடக்குத்து, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, சிதம்பரம், கொத்தவாச்சேரி, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, அண்ணாமலைநகர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வானமாதேவியில் 67 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

மேலும் செய்திகள்