தூத்துக்குடியில் “சரியான உணவருந்துதல் சவால் திட்டம்” கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில் சரியான உணவருந்துதல் சவால் திட்டத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

Update: 2020-10-23 17:44 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள ’சரியான உணவருந்துதல் சவால்‘ என்ற திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை சரியாக அமல்படுத்தி உணவுப் பாதுகாப்பை வலுவாக உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை தயாரிப்பாளர்கள் வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். பொதுமக்களிடையே சுகாதாரமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தி சுகாதாரமான உணவு வகைகளுக்கு சந்தையில் தேவையை அதிகப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக, இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையரகம் ’சரியான உணவருந்துதல் சவால்‘ என்ற போட்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

150 மாவட்டங்கள் தேர்வு

இந்த திட்டத்துக்காக இந்திய அளவில் 150 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டமும் இடம்பெற்று உள்ளது. எனவே, இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தில் உள்ள ஐந்து வகை பிரிவுகளிலும் உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட வேண்டும். உணவு வணிகர்களில் குறைந்தது 90 சதவீதம் பேர் ஜனவரி 2021-க்குள் உணவு பாதுகாப்புத் துறை உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். 300 கண்காணிப்பு உணவு மாதிரிகள் மற்றும் 90 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து அங்கன்வாடி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் சரியான உணவருந்துதல் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். உணவு வணிகருக்கும் உணவு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்து சான்றிதழ் அளிக்க வேண்டும்.

முதலிடம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையரகத்தில் சிறப்புச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் வரைமுறைகளுக்கு உட்பட்டு வணிகம் செய்ய வேண்டும். நுகர்வோர்கள் உணவு பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை மாநில வாட்ஸ் அப் எண் 94440 42322-க்கு புகார்களை அனுப்ப வேண்டும். அனைத்து பிரிவினர்களும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து ’சரியான உணவருந்துதல் சவால் திட்டத்தில்‘ தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தை பெறும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்ஆறுமுகம், துடிசியா தலைவர் நேருபிரகாஷ், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் தேன்ராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், காளிமுத்து, முருகேசன், நாகசுப்பிரமணி, முனியராஜ், சக்திமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்