வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.10,000 கோடி நிதி உதவி தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு எடியூரப்பா கடிதம்

கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி தொகுப்பு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-10-23 22:01 GMT
பெங்களூரு, 

வட கர்நாடகத்தில் உள்ள கலபுரகி, ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வடகர்நாடக மாவட்டங்களில் உள்ள 247 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் 43 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். 233 நிவாரண முகாம்களில் 38 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் பறந்து சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ.243 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி தொகுப்பு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தடுப்பு பணிகள்

கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்கள் 3 முறை கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் ரூ.21,609 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆகஸ்டு மாதம் ரூ.9,441 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.5,668 கோடியும், நடப்பு மாதத்தில் இதுவரை ரூ.6,500 கோடியும் சேதம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதி குறித்த விதிமுறைகளை எளிமையாக்கி நிதி உதவியை அதிகம் வழங்க வேண்டும்.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மாநில அரசிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை. கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி தொகுப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்