மராட்டிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் மந்திரி நவாப் மாலிக் பேட்டி

மராட்டியத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மந்திரி நவாப் மாலிக் கூறியுள்ளார்.

Update: 2020-10-24 23:49 GMT
மும்பை, 

பீகார் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பீகார் மாநில மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் அவுரங்காபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்திற்கு கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளது. தேசிய அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது மற்ற குடிமகன்களுக்கு அநீதியை இழைத்து உள்ளது.

இலவச தடுப்பூசி

மராட்டியத்தில் எங்களது அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததுடன் மத்திய அரசு நாட்டின் எல்லைகளை மூடி இருந்தால் கொரோனா தொற்று பரவுவது தடுக்கப்பட்டு உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

மாநில வக்பு வாரிய தலைமையகம் அவுரங்காபாத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்படும். மண்டல அலுவலகம் இங்கு செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்