நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு

நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.

Update: 2020-10-25 03:16 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்ததால் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டது. இதனால் 17 சதவீத ஈரப்பதம் என்பதை தளர்த்தி 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழுவினர் தமிழகத்திற்கு வந்தனர். தஞ்சை மாவட்டம் நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு குழு அலுவலர்கள் யாதேந்திரஜெயின், யூனுஸ், ஜெய்சங்கர், பஷந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து நேற்று ஆய்வு செய்தனர்.

விவசாயிகளுடன் சந்திப்பு

அப்போது அவர்கள், விவசாயிகளை சந்தித்து நெல்லின் தரம், ஈரப்பதம் எப்படி உள்ளது என கேட்டறிந்தனர். விவசாயிகள் கூறிய பதிலை அவர்கள் குறிப்பெடுத்து கொண்டனர்.

ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர்(பொறுப்பு) சிற்றரசு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். மத்திய குழுவினர் இரவு தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் தங்கினர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில நெல் கொள்முதல் நிலையங்களை மத்தியக்குழுவினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

தஞ்சையை அடுத்த களிமேடு, வல்லம், ஆலக்குடி, குலமங்கலம், இந்தலூர், பூதராயநல்லூர், அடைஞ்சூர், குழிமாத்தூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு பணியில் இருந்த அலுவலர்களிடம் தற்போது எவ்வளவு நெல் இருப்பு உள்ளது. எத்தனை லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டுள்ளது. எவ்வளவு சாக்குகள், தார்ப்பாய்கள் இருப்பு உள்ளது ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர், விவசாயிகளிடம் இருந்து எவ்வித புகாரும் வராமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அவர், நெல்லை விற்பனை செய்ய வந்த விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்