பெரம்பலூர் அருகே சலவை தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

பெரம்பலூர் அருகே சலவை தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள், அடுத்தடுத்த வீடுகளிலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-10-25 03:45 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 40). சலவை தொழிலாளியான இவர் பெரம்பலூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனால் நொச்சியத்தில் உள்ள வீட்டில் செல்வக்குமாரின் தாய் மாரியம்மாள் மட்டும் வசித்து வருகிறார். அவரும் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள, அவருடைய மூத்த மகன் சுப்ரமணியன் வீட்டிற்கு தூங்க சென்றார். இதையடுத்து மாரியம்மாள் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும் அதே பகுதியில் தனலட்சுமி(57) வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து, வீட்டின் பூட்டை உடைத்து சாமி படத்துக்கு பின்னால் இருந்த ரூ.500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் அடுத்தடுத்துள்ள மாமூண்டி(35), பூங்கொடி(55) ஆகியோரது வீடுகளில் ஆட்கள் இல்லாததை அறிந்து, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பால் வியாபாரி மீது தாக்குதல்

மேலும் அதே பகுதியில் உள்ள கொத்தனார் சுப்ரமணி (52) வீட்டில் மர்மநபர்கள் பூட்டை உடைத்தபோது, சத்தம் கேட்டு சுப்ரமணி எழுந்து மின்விளக்குகளை போட்டுள்ளார். இதனால் மர்மநபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். மேலும் பால் வியாபாரியான ரமேஷ்(29) வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த ரமேஷ் மர்மநபர்களை பிடிக்க முயன்றார்.

ஆனால் மர்மநபர்கள் ரமேசை தாக்கி விட்டு தப்பி சென்றனர். திருட வந்த 3 பேரும் முகமூடி அணிந்திருந்தனர் என்று ரமேஷ் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் திருட்டு நடந்த வீடுகளையும், திருட்டு முயற்சி நடந்த வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மளிகை கடையில்...

கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவங்கள் நொச்சியம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே ஏ.இ.ஒ. அலுவலக சாலையில் உள்ள மாரிமுத்து(வயது 59) என்பவரது மளிகை கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பான புகார்களின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பும், வணிகர்கள் தங்களது கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்