நாகர்கோவிலில் வீடுகள், கடைகளை இடிப்பதை கண்டித்து போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில், வணிகர்கள் மனு

நாகர்கோவிலில் வீடுகள், கடைகளை இடிப்பதை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கலெக்டர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

Update: 2020-10-25 05:56 GMT
நாகர்கோவில், 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன், செயலாளர் நாராயணராஜா என்ற ஸ்ரீதர், பொருளாளர் ராஜதுரை, செட்டிகுளம் வியாபாரிகள் சங்க தலைவர் கதிரேசன், நிர்வாகிகள் சிவதாணு, அம்பலவாணன் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பாரம்பரிய வர்த்தக பகுதிகளை உடைத்தெறிந்து, சாலை விரிவாக்கம் செய்வது ஒவ்வொரு வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகும். ஆகவே அதிகாரிகள் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். அப்பாவி வியாபாரிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களையும், வியாபாரிகளையும் அச்சுறுத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டு இருக்கும் நிலம் மற்றும் கட்டிடத்துக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். இடிக்கப்பட்ட கடைகளின் கட்டிட வரியை குறைத்திட வேண்டும்.

உரிய இழப்பீடு

நாகர்கோவில் மாநகரில் தனியார் கோவில் டிரஸ்ட் நிலம், கட்டிடங்கள் கைமாற்று பத்திரப்படி சந்தை மதிப்பில் வாங்கப்பட்டவை ஆகும். நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்துக்காக அண்மையில் பாலராமபுரம் முதல் கரமனை வரை நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு பல மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டது. எனவே நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்கத்துக்கு இடம் வழங்கியவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையாளராக கேரள பகுதியைச் சேர்ந்த ஆஷா அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கேரளாவில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் தெரிந்திருந்தும் பொதுமக்களை மிரட்டி சாலை விரிவாக்கத்துக்கு இலவசமாக இடம் கேட்பது நியாயமல்ல. மேலும், நாகர்கோவில் மாநகர பகுதியில் கடைகளையும், மால்களையும், அப்பாவிகளின் வீடுகளையும் ‘சீல்‘ வைத்து விட்டு, அதற்கான காரணங்களை தேடி அலைந்து கொண்டிருக்காமல் உடனடியாக சீலை அகற்றி விட்டு திறக்க தமிழக அரசு, குமரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உத்தரவிட வேண்டும். உடைக்கப்பட்ட கடைகளுக்கும், இடங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

ஒரு திட்டத்தை அறிவித்து இழப்பீடு வழங்கி நிலம் மற்றும் கட்டிடங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக இலவசமாக அப்பாவிகளின் வயிற்றில் அடித்து கூட்டு சதி செய்து விட்டு இடம் எடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியை கண்டித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதையும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். ஆகவே மாநகராட்சியின் நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் நாகர்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றிலும் மனு கொடுத்தனர். தமிழக முதல்-அமைச்சருக்கும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்