ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-25 09:15 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 880 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 1,040 கனஅடி தண்ணீர் வந்தது.

அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையின் நீர் மட்டம் நேற்று 39.96 அடியாக இருந்தது. எனவே, பாதுகாப்பு கருதி கெலவரப்பள்ளி அணைக்கு வரும் 1,040 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் கரையோரங்களில் வாழும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆயுதபூஜைக்காக வீடுகளில் உள்ள பொருட்களை ஆற்றில் கொண்டு வந்து சுத்தம் செய்ய வேண்டாம் என வருவாய்த்துறையினர், கெலவரப்பள்ளி, சின்னகொள்ளு, பெத்தகொள்ளு, காமன்தொட்டி, உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 49.20 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 1,300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்