ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி அதில் முதலீடு செய்தவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2020-10-25 11:15 GMT
விருதுநகர்,

அருப்புக்கோட்டை வெள்ளைகோட்டை பகுதியை சேர்ந்தவர் பெண் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டு தொகைக்கு ஏற்ப தினசரி 2 சதவீதம் பணம் வழங்கப்படும் என்றும் முதலீடு செய்து 100 நாட்கள் முடிந்த பின்னர் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளர்களை சேர்க்கும் பணியில் டி.கல்லுப்பட்டி, அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் திருமங்கலத்தை சேர்ந்த ஒருவர் ஆகியோர் முகவர்களாக செயல்பட்டு வந்தனர்.

இவர்கள் கூறியதை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், வணிகர்கள், விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் தனித்தனியே பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு முதலீடு செய்த பணம் பல கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டியை சேர்ந்த பிச்சை என்பவர் தான் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்ததாகவும், தொடக்கத்தில் சில நாட்கள் மட்டும் தினசரி 2 சதவீத பணத்தை திருப்பி வழங்கி வந்த நிறுவனம் பின்னர் பணம் தருவதை நிறுத்தி விட்டது என்றும், முதலீடு செய்த பணத்தை நிறுவன உரிமையாளரான அப்பெண்ணிடம் கேட்ட போது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் பிச்சை புகாரில் கூறி உள்ளார்.

இது தொடர்பாக பிச்சை ஆன்லைனில் புகார் அளித்து இருந்தாலும் விசாரணை நடத்தும்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ள நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் நிறுவன உரிமையாளர் மற்றும் முகவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்