கோவை ரெயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியின் பணப்பையை திருடிய வாலிபர் கைது

கோவை ரெயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியின் பணப்பையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-10-25 15:45 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணசாமி (வயது 60). ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. இவர் நேற்று முன்தினம் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவர் சென்னை செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்ட்டருக்கு சென்றார். அங்கு தனது பணப்பையை (பர்ஸ்) அங்குள்ள ஓரிடத்தில் வைத்து விட்டு டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு பணப்பையை எடுக்க மறந்து சென்றார்.

சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்த போது பணப்பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவர், டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில் கோபாலகிருஷ்ணசாமியின் பணப்பையை வாலிபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. உடனே போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் சென்னை அருகே ஜோலார்பேட்டைக்கு செல்ல டிக்கெட் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சென்னை செல்ல 4-வது நடைமேடையில் தயாராக இருந்த ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (33) என்பதும், கோபாலகிருஷ்ணசாமியின் பணப்பையை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணப்பையை பறிமுதல் செய்தனர். ரூ.14 ஆயிரம் இருந்த பணப்பையை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்