கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு 100 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

தர்மபுரி பகுதியில் கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு 100 கிலோ கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-10-26 00:42 GMT
தர்மபுரி,

ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி அடுத்த கடகத்தூர் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் மற்றும் நாட்டு சக்கரை ஆகியவற்றில் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறதா?, தரமற்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார்.

அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி மற்றும் அலுவலர்கள் கடகத்தூர் பகுதிகளில் செயல்படும் கரும்பு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வெல்லம் பார்ப்பதற்கு வெளிர் நிறத்தில் இருப்பதற்காக ஏதேனும் வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறதா?, வெள்ளத்தில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கலப்பட வெல்லம் பறிமுதல்

இந்த ஆய்வின் போது ஒரு ஆலையில் வெல்லம் தயாரிப்பதற்கு வேதிப்பொருட்கள் மற்றும் மைதா பயன்படுத்தியது தெரியவந்தது. உடனடியாக அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட வெல்லம் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது தெரியவந்தால் அந்த ஆலையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் அந்த ஆலையில் இருந்து 10 கிலோ மைதா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 100 கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் வெல்லம் மற்றும் நாட்டு சக்கரைகளில் வேதிப்பொருட்கள் மற்றும் கலர் சாயங்கள் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்