தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2020-10-26 22:45 GMT
தர்மபுரி, 

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தர்மபுரி மாவட்ட பேரவை தொடக்க விழா தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி, பேரவையை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் ராஜசேகரன், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தகடூர் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் சங்க மாவட்ட துணை செயலாளர் சுந்தரம், மாவட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி மாவட்ட ஜல்லிக் கட்டு பேரவை தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசிய தாவது:-

தமிழர்களின் வீர விளை யாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தடைகளை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டார். அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங் களில் ஜல்லிக்கட்டு நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டுமுதல் ஜல்லிக் கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பள்ளி கிராமத்தில் ஆலம்பாடி நாட்டு மாட்டின் ஆராய்ச்சி மையத்தை தமிழக அரசு அமைத்து வருகிறது. இதன் மூலம் நாட்டு மாடுகள் மற்றும் காளை மாடுகள் தேவை யானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் வாழ்த்து

இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி மூலம் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தொடக்க விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முன்னதாக விழா நடைபெற்ற வளாகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளை இனங்களை அமைச்சர் கேபி அன்பழகன் பார்வையிட்டார்.

இந்த விழாவில் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பெரியண்ணன், பழனிச்சாமி, அங்குராஜ், செந்தில்குமார், மாதேஷ், ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்