ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-29 02:58 GMT
பெரம்பூர், 

விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சென்னை பெரம்பூர் சீனிவாசா தெருவில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர்.

ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் உடன் தங்கியிருந்த நண்பர்கள் ஊருக்குச் சென்று விட்டனர். குமரேசன் மட்டும் அறையில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஊருக்குச் சென்றிருந்த நண்பர்கள் சென்னை திரும்பி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது தங்களது அறையில் குமரேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்பியம் போலீசார் குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தற்கொலை செய்து கொண்ட குமரேசன், ஓய்வுநேரத்தில் செல்போனில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

ஆன்லைன் சூதாட்டம்

இதனால் நண்பர்களிடமும், தனது தம்பி மற்றும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சூதாடியதுடன், சம்பள பணத்தையும் வீட்டிற்கு அனுப்பாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குமரேசன், அறையில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார்? என்பது விசாரணைக்கு பிறகு தெரிய வரும் எனவும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்