நாகையில் கொசு மருந்து அடிக்கும் எந்திரம் வெடித்து தீப்பிடித்தது ஊழியர் காயம்

நாகையில் கொசு மருந்து அடிக்கும் எந்திரம் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஊழியர் காயமடைந்தார்.

Update: 2020-10-29 04:38 GMT
நாகப்பட்டினம்,

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக நகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நாகை நகராட்சி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிப்பாளையம் 16- வது வார்டு சங்கரவிநாயகர் கோவில் மேல்சந்து பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி ஊழியர் எந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென எந்திரம் வெடித்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.

ஊழியர் காயம்

இதில் நகராட்சி ஊழியர் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொசுமருந்து அடிக்கும் எந்திரம் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டதாகவும், மேலும் சரியாக பராமரிக்காததன் காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்