பழவேற்காடு ஏரியில் ரூ.27 கோடியில் முகத்துவாரம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

பழவேற்காடு ஏரியில் ரூ.27 கோடியில் முகத்துவாரம் அமைப்பதற்காக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

Update: 2020-10-30 03:34 GMT
மீஞ்சூர், 

பழவேற்காடு ஏரியில் 160 வகையான மீன் இனங்களும் பல்வேறு நீர்வாழ் உயிரினங்களும் காணப்படுகிறது. மேலும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பறவையினங்கள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் சரணாலயமாக விளங்குகிறது. இந்த ஏரியை சுற்றி 69 மீனவ கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். ஆரணி ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது பழவேற்காடு ஏரியில் நுழைந்து வங்க கடலில் கலக்கிறது.

கோடை காலத்தில் இந்த முகத்துவாரம் அடைப்பு ஏற்படுவதால் மீனவர்கள் படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தமிழக சட்டமன்றத்தில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க கோரிக்கை விடுத்தார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் பல்வேறு அரசு துறைகளின் ஒப்புதல் கிடைத்தது.

கருத்து கேட்பு கூட்டம்

இதையடுத்து தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய்ஆனந்த், மாசு கட்டுப்பாட்டு வாரிய திருவள்ளூர் மாவட்ட பொறியாளர் காமராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் அனைவரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோருக்கு முகத்துவாரம் தூர்வாரி இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.27 கோடி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.

இதில் பொன்னேரி எம்.எல்.ஏ. பேசுகையில்:-

மீனவர்கள் நலன் காக்க இந்த அரசு பாடுபட்டு வருவதாகவும் ரூ.200 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

போராட்டம் நடத்தினீர்கள்

மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை உரையாற்றுகையில்:-

நான் பதவியேற்ற நாளில் நீங்கள் முகத்துவாரம் தூர்வார போராட்டம் நடத்தினீர்கள். அப்போது நான் வந்து பேச்சுவார்த்தை நடத்தினேன். முகத்துவார பணிக்காக ரூ.27 கோடி ஒதுக்கிய நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் கடைசி நிகழ்ச்சியாக கலந்து கொண்டது மனநிறைவை தருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் இன்பராஜ், பொன்னேரி ஆர்.டி.ஓ. வித்யா, தாசில்தார் புகழேந்தி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் தமிழ்ச்செல்வன், பானுபிரசாத், இயக்குனர் பொன்னுதுரை, பழவேற்காடு மீன்வள கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், துணைத்தலைவர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு மீனவ அமைப்பினர் மீனவ கிராம நிர்வாகிகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்