சுனாமி-கஜாபுயலால் பாதிக்கப்பட்ட 399 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்

பிரதாபராமபுரத்தில் சுனாமி-கஜா புயலால் பாதிக்கப்பட்ட 399 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

Update: 2020-10-30 03:58 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் பகுதியில் சுனாமி மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தினை கொண்டுவர பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

உதவித்தொகை ஆணை

அதன்படி திருப்பூண்டி கிழக்கு கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 156 பயனாளிகளுக்கு ரூ. 62 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும், பாலகுறிச்சி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 23 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலும், விழுந்தமாவடி கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 163 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலும், காரப்பிடாகை தெற்கு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 57 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 399 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும் 20 பேருக்கு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை வழங்க ஆணை வழங்கப்பட்டது. பொதுமக்கள் நலனுக்காகவும், மீனவர்கள் நலனுக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் சிவா, வேதையன், பால்ராஜ், பாலை செல்வராஜ், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், செந்தமிழ் செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்