குமரியில் கடந்த 7 நாட்களில் கஞ்சா, மது விற்ற 127 பேர் கைது

குமரி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் கஞ்சா, மது விற்ற 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-30 04:39 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தற்போது மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கஞ்சா, மது விற்றவர்கள்

இந்த நிலையில் கடந்த 7 நாட்களில் மாவட்டம் முழுவதும் 9 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைதாகி உள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 4 கிலோ 850 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்ததாக 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 பேர் கைதாகியுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 117 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 214 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா, மது விற்றதாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்