ஊராட்சிக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-10-30 05:14 GMT
பவானி, 

பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக தமிழ்ச்செல்வனும், செயலாளராக குணசேகரனும் உள்ளனர். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன், பயிர்கடன், நகைக்கடன் ஆகியவை வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் உத்தரவிட்டனர்.

சோதனை

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட துணை ஆய்வுக்குழு போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஊராட்சிக்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து யாரையும் போலீசார் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்து யாரையும் அலுவலகத்துக்குள் செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை. கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் கதவுகளை மூடிவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.2¼ லட்சம் பறிமுதல்

இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 842 மற்றும் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை இரவு 9.40 மணி வரை நடைபெற்றது. சோதனை முடிந்ததும் போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனையால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்