2021-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி: எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவார் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

தமிழகத்தில் 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இதில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதியுடன் தெரிவித்தார்.

Update: 2020-10-30 12:00 GMT
சிவகாசி,

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனையூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் நலனில் எப்போதும் ஜெயலலிதா அக்கறை கொண்டு இருந்தார். அவரை போலவே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு வருகிறார். மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தொடர்ந்து 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் நல திட்டங்கள் பல செய்யப்பட்டு வருகிறது.

18 துறைகளில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்திடாத பணிகளை மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி செய்து மக்களின் பாராட்டையும், ஆதரவினையும் பெற்றுள்ளார்.

வருகிற 2021-ல் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரின் வியூகத்தால் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். அப்போது மீண்டும் தமிழகத்தின் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பார் இது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, நவாஸ், ஊராட்சி ஒன்றிய என்ஜினீயர் நாராயணசாமி, ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபாஷினி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆனையூர் பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்