புதுவையில் 4-ந்தேதி முதல் நடக்க இருந்த காவலர் தேர்வு திடீர் நிறுத்தம் - கவர்னர் கிரண்பெடி அதிரடி உத்தரவு

புதுவையில் வருகிற 4-ந்தேதி முதல் நடைபெற இருந்த காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பெடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுவை காவல் துறை பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

Update: 2020-10-30 22:30 GMT
புதுச்சேரி,

கடந்த 2018-ம் ஆண்டு புதுவை காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இந்த பணியிடங்களில் சேர விரும்பி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில் போதுமான சான்றிதழ்கள் இணைக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் பல ஆண்டுகளாக போலீஸ் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படாததால் வேலை தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை வழங்கவேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை வழங்கிட புதுவை அரசு முடிவெடுத்து கவர்னர் கிரண் பெடிக்கு கோப்புகளை அனுப்பியது. ஆனால் அதற்கு அவர் அனுமதி மறுத்து விட்டார். இதையடுத்து வயது வரம்பில் தளர்வு அளிக்கக் கேட்டு சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த ஐகோர்ட்டு வயது வரம்பு சலுகை தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதன்பின்னரே 2 ஆண்டுகள் தளர்வு அளித்து உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி இளைஞர்கள் தொடர்ச்சியாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் காவலர் உடல்தகுதி தேர்வின்போது ஓட்டம் நடக்கும்போது நேரத்தை துல்லியமாக கண்டறிய மைக்ரோ சிப் பொருத்தும் முறைக்கு பதிலாக விசில் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கவர்னர் கிரண் பெடிக்கு புகார்கள் சென்றன. இந்த தேர்வு முறை குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் காவலர் தேர்வினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பெடி அனுப்பியுள்ள குறிப்பாணையில் கூறியிருப்பதாவது:-

உடல் தகுதி தேர்வின்போது டிஜிட்டல் முறைக்கு பதிலாக வேறுமுறையை பயன்படுத்துவது, பிற பிராந்தியங்களில் 400 மீட்டர் ஓட்டத்துக்கான டிராக் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன.

தேர்வு முறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிமுறை, நிலையாணை ஆகியவற்றை பின்பற்றவேண்டும். அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது பிரச்சினைகளை ஏற்படுத்தி கோர்ட்டுக்கு சென்றுவிடும்.

எனவே உரிய அதிகாரம் பெற்றவர் முடிவு எடுக்கும்வரை காவலர் பணிக்கான தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும். இதுதொடர்பான கோப்புகளை தலைமை செயலாளர் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இந்த உத்தரவின் நகல் போலீஸ் டி.ஜி.பி.க்கும் அனுப்பப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று தற்காலிகமாக நிறுத்தி வைத்து கவர்னர் உத்தரவிட்டு இருப்பது வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்