தா.பேட்டை அருகே பரபரப்பு ஊராட்சி தலைவி மீது தாக்குதல் மூதாட்டி உள்பட 2 பேர் மீது வழக்கு

தா.பேட்டை அருகே ஊராட்சி தலைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மூதாட்டி உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-11-01 01:09 GMT
தா.பேட்டை, 

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே வாளசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் அரசு புறம்போக்கு இடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அம்மா விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி முதல் அந்த விளையாட்டு மைதானத்தை சமப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை பார்வையிடுவதற்காக வாளசிராமணி ஊராட்சி தலைவி மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது விளையாட்டு மைதானம் அமைக்கும் இடத்தின் அருகில் உள்ள நிலத்தை சேர்ந்த சந்திரா (வயது 32), பாக்கியம் (60) ஆகியோர் ஊராட்சி தலைவியிடம் சென்று தங்களது இடத்தையும் சேர்த்து மைதானம் அமைக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊராட்சி தலைவி மீது தாக்குதல்

இதில் ஆத்திரமடைந்த சந்திரா, பாக்கியம் ஆகியோர் ஊராட்சி தலைவி மகேஸ்வரியை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஊராட்சி தலைவி துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தா.பேட்டை ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டுவை நேரில் சந்தித்து ஊராட்சி தலைவியை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் ஊராட்சி தலைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சந்திரா, பாக்கியம் ஆகியோர் மீது தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்