7 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம்-புதுச்சேரி இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது பொதுமக்கள் மகிழ்ச்சி

7 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம், புதுச்சேரி இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2020-11-02 06:06 GMT
விழுப்புரம், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. 2 மாதங்களுக்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு போக்குவரத்தும் மெல்ல மெல்ல தொடங்கியது. தற்போது தமிழகத்தில் பஸ் போக்குவரத்து வெகுவாக தொடங்கி இயங்கி வருகிறது. இருப்பினும் அருகே உள்ள புதுச்சேரி மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி, தமிழகம் இடையே போக்குவரத்தை தொடங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து, புதுச்சேரி முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, இரு மாநிலங்களுக்கும் இடையே அரசு மற்றும் தனியார் போக்குவரத்தை இ-பாஸ் முறை எதுவும் இல்லாமல் அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் நேற்று முன்தினம் அறிவித்தது.

7 மாதங்களுக்கு பிறகு...

இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. சுமார் 7 மாதங்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பலர் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அதிகளவில் செல்வதுண்டு. பஸ் போக்குவரத்து இல்லாதால், இதுபோன்ற காரணத்திற்காக செல்ல வேண்டிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது போக்குவரத்து தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்