திண்டுக்கல்லில் பயங்கரம்: வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை தடுக்க வந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு

திண்டுக்கல்லில், வீடு புகுந்து தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2020-11-02 06:23 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் பாரதிபுரம் கே.எம்.எஸ். நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய தாயார் பாப்பாத்தி (57), தங்கை புவனா. செல்வராஜூவுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அவர், குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் செல்வராஜ், அவருடைய தாய், தங்கை ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் செல்வராஜ் வீட்டில் அமர்ந்து தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங் கர ஆயுதங்களுடன் அவருடைய வீட்டுக்குள் புகுந்தது.

வெட்டிக்கொலை

அந்த கும்பலை செல்வராஜ் தடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து அபயகுரல் எழுப்பிய பாப்பாத்தி, அந்த கும்பலை தடுத்தார். அப்போது அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்து வலியால் பாப்பாத்தி அலறி துடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த கும்பல் செல்வராஜை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அரிவாள் வெட்டு பட்டதில் செல்வாஜின் தலை சிதைந்தது. அவருடைய உடலிலும் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

முன்விரோதம்

பின்னர் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த பாப்பாத்தியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த சுள்ளான் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்வராஜூக்கு தொடர்பிருப்பதும், அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மோப்பநாய்

முன்னதாக கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு இனிகோ திவ்யன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டுக்குள் மோப்பம் பிடித்துவிட்டு தெருவில் இறங்கி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்