கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கணவன்-மனைவி பலி

கந்தர்வகோட்டை அருகே கல்லறை திருநாளில் பொருட்கள் வாங்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலியாகினர்.

Update: 2020-11-02 23:50 GMT
கந்தர்வகோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பழைய கந்தர்வகோட்டை கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு பவுல்ராஜ், ராஜேஷ் என 2 மகன்களும், அனுசியா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் நேற்று கல்லறை திருநாளில் உரிய பொருட்கள் வாங்குவதற்காக கந்தர்வகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். ஜீவன் ஜோதி கார்மல் அருகில் வந்த போது, புதுக்கோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக பன்னீர்செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயடைந்தனர்.

இதில் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

சோகம்

விபத்து குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றினர். மேலும் பன்னீர்செல்வம், செல்வி ஆகியோர் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பன்னீர் செல்வம் மகன் பவுல்ராஜீக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில், கல்லறை திருநாளில் முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்ய பொருட்கள் வாங்க செல்லும் போது விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்