திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

Update: 2020-11-03 00:36 GMT
திருச்சி, 

திருச்சி கண்டோன்மெண்ட் வார்னர்ஸ் சாலையை சேர்ந்த தொழிலதிபர் கண்ணப்பன் என்பவரது மகன் கிருஷ்ணன் என்ற முத்தையா (வயது 12). கடந்த 28-ந்தேதி இந்த சிறுவன் தனது வீட்டு முன் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவனை கடத்தி சென்றனர். சிறுவனை கடத்திய நபர்கள் அவரது தந்தை கண்ணப்பனுக்கு போன் செய்து ரூ.6 கோடி தந்தால் தான் உங்கள் மகனை விட முடியும் என்று கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணப்பன் உடனடியாக இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் செய்தார். கமிஷனர் உத்தரவின் படி போலீசார் குறிப்பிட்ட பதிவு எண்ணுள்ள காரை இரவு முழுவதும் வலைவீசி தேடினர். போலீசார் துரத்துவதை அறிந்ததும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் ஒரு முட்டுச் சந்தில் காருடன் சிறுவனை விட்டு விட்டு தப்பி ஓடினார்கள். இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட போலீசார் அவனை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தியது ஏன்?

கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற காரை போலீசார் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் தனது காரை திருச்சி கீழ கல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரகாஷ் (25), உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த திருப்பதி (26) ஆகியோர் எடுத்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக இந்த வழக்கில் துப்பு துலக்கினர். இதில் பிரகாஷ், திருப்பதி மற்றும் குளித்தலையை சேர்ந்த கிஷோர் குமார் (23) ஆகியோர் சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள ஒரு கார் பட்டறைக்கு அடிக்கடி வந்து சென்றதும், அப்போது பட்டறை உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் சிறுவனை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் பட்டறையின் உரிமையாளர் மாணிக்க பாண்டியன், அவரது தம்பி சரவணன் மற்றும் செல்வகுமார், சதீஷ் பாபு ஆகிய 4 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் ஏற்கனவே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் 3 பேர் கைது

தலைமறைவாக இருந்த பிரகாஷ், திருப்பதி, கிஷோர் குமார் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பிரகாஷ் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் பிரகாஷ், திருப்பதி ஆகிய இருவருக்கும் கண்டோன்மெண்ட், கே.கே. நகர் பகுதிகளில் பெண்களிடம் நகை வழிப்பறி செய்த வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.

கோர்ட்டில் மனு தாக்கல்

இதற்கிடையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாணிக்க பாண்டியன் உள்பட 4 பேரும் கரூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கண்டோன்மெண்ட் போலீசார் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண் 2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்