ஊரடங்கால் மூடப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை 8 மாதங்களுக்கு பிறகு திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை 8 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2020-11-04 04:08 GMT
பத்மநாபபுரம், 

குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த அரண்மனை கலை நுட்பத்துடன் கூடிய மர கட்டைகள், சுண்ணாம்பு கலந்த சுவர்கள், மூலிகை பொருட்கள் கலந்த தரைதளங்களுடன் கட்டப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் உள்ளே மர வேலைப்பாடுகளுடன் பல அரிய சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் வியக்கத்தக்க பல்வேறு கலை நுட்பங்கள் சார்ந்த பொருட்கள் உள்ளன. இவற்றை காண தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த என ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

வார நாட்களில் திங்கட்கிழமை தோறும் அரண்மனைக்கு விடுமுறை ஆகும். மற்ற நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது.

கட்டுப்பாடுகளுடன் திறப்பு

தற்போது கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து ஊரடங்கில் அரசு பல தளர்வுகளை அளித்தது. இதையடுத்து 3-ந் தேதி (அதாவது நேற்று) முதல் பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்படும் என பொறுப்பு அதிகாரி தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று பத்மநாபபுரம் அரண்மனை திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையொட்டி அரண்மனை நுழைவு வாயிலில் பொறுப்பு அதிகாரி அஜித்குமார் தலைமையில் ஊழியர்கள் சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்து வருகிறார்களா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பிறகு அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்ற பின்னரே ஊழியர்கள் அனுமதித்தனர்.

புதுமண தம்பதி

அரண்மனைக்கு வந்த புதுமண தம்பதி கூறுகையில், திருமணம் முடிந்து முதல் முறையாக மனைவியுடன் அரண்மனையை பார்க்க வந்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

கணவன்-மனைவி இடையேயான அன்பை வெளிப்படுத்தும் புரிதலை அரண்மனையில் உள்ள பல கலை நுட்பங்கள் வெளிப்படுத்துகிறது என தெரிவித்தனர். அரண்மனையை காண நேற்று 202 சுற்றுலா பயணிகள் வந்ததாக ஊழியர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்