கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் - சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது

கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக அக்காளையும், அவரது குழந்தையையும் கொலை செய்து நாடகமாடிய தங்கையை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2020-11-05 12:26 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகள் சுமதி(வயது 21). இவருக்கும் பாண்டியன் குப்பத்தை சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 1½ வயதில் ஸ்ரீநிதி என்ற குழந்தை இருந்தது.

இந்த நிலையில் சின்னசாமி சுமதியை அவரது குழந்தையுடன் விருந்துக்கு அழைத்து வந்தார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சுமதி மனநலம் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே கொடுவாளால் வெட்டிக்கொண்டு தன் மீதும், குழந்தையின் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதில் குழந்தை ஸ்ரீநிதியும் பரிதாபமாக இறந்தது. இது குறித்து சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட சுமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுமதியின் உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்கள் அவர் தானாகவே வெட்டியதாக தெரியவில்லை? யாரோ அவரை வெட்டிவிட்டு பின்னர் அவரது உடலிலும், குழந்தையின் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று சுமதி மற்றும் ஸ்ரீநிதி ஆகியோரின் உடல்களை உறவினர்கள் அசகளத்தூர் கிராமத்துக்கு எடுத்து வந்தனர். அங்கு சுமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அவரது உறவினர்கள் அண்ணாநகர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுமதியின் தங்கை சுஜாதாவின் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.

இதை அடுத்து வரஞ்சரம் போலீசார், சுமதியின் தங்கை சுஜாதாவை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் 20 சென்ட் நிலத்தை அடைவதற்காக சுமதியையும் அவரது குழந்தையையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சுமதியின் தந்தை சின்னசாமி புதிதாக 20 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். அதை தனக்கு எழுதி தரும்படி சுஜாதா கேட்டபோது, சுமதியும் அந்த நிலத்தில் பங்கு கேட்டார். இதனால் நிலம் முழுவதையும் தனதாக்கி கொள்வதற்காக அவரையும், அவரது குழந்தையையும் கொலை செய்ய சுஜாதா முடிவு செய்தார்.

சம்பவத்தன்று சின்னசாமியும், அவரது மனைவியும் கூலி வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சுஜாதா உடன் பிறந்த அக்காள் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து சுமதியின் தலை, கை, கால் போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் தாங்க முடியாத அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தாய் மற்றும் குழந்தையின் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து ஒன்றும் தெரியாததுபோல் வெளியே சென்று விட்டார். பின்னர் கிராம மக்களை நம்ப வைப்பதற்காக சுமதி மனநலம் பாதிக்கப்பட்டு கொடுவாளால் தனக்கு தானே உடலில் வெட்டிக்கொண்டு குழந்தையுடன், தீக்குளித்துவிட்டதாக கூறி நாடகமாடியது மேற்படி விசாரணையில் தெரியவந்தது.

விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சுஜாதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 20 சென்ட் நிலத்துக்காக சொந்த அக்காளையும், அவரது குழந்தையையும் தங்கையே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அசகளத்தூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்