முன்னாள் மந்திரி வினய்குல்கர்னி கைது: அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல டி.கே.சிவக்குமார் பேட்டி

முன்னாள் மந்திரி வினய்குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2020-11-06 02:50 GMT
பெங்களூரு, 


எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்துள்ளனர். யோகேஷ்கவுடா கொலை வழக்கு குறித்து அவரிடம் நான் பேசினேன். இந்த வழக்கை கர்நாடக போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். தார்வார் பகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர் வினய்குல்கர்னியை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட சதி செய்துள்ளனர். அரசியல் அழுத்தத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பணிந்துவிட்டனர்.

அரசியல் அதிகாரம் என்பது யாருக்கும் நிரந்தரமல்ல. எங்கள் கட்சியை சேர்ந்த கே.ஜே.ஜார்ஜிக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தனர். போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கில் அவருக்கு கோர்ட்டில் நற்சான்றிதழ் கிடைத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் அதிகமாக உள்ளன. அரசியலில் காலச்சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் அழுத்தத்திற்கு பணியாமல் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும்.

நம்பிக்கை வைத்துள்ளோம்

வினய்குல்கர்னி கைதை சில பா.ஜனதா நிர்வாகிகள் கொண்டாடுகிறார்கள். இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காது. நமது நாட்டின் சட்டம், அரசியலமைப்பு மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். வினய்குல்கர்னிக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. தேர்தல் வரும்போதும், அதற்கு பிறகும் இவ்வாறு பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜனதா அரசு ஈடுபடுகிறது. எதிர்க்கட்சிகளில் மோசமான நிர்வாகிகளாக இருப்பவர்கள், பா.ஜனதாவில் சேர்ந்ததும் புனிதராகிவிடுகிறார்களா?.

இந்த கொலை வழக்கு விசாரணை முடியட்டும். அதன் பிறகு நாங்கள் அதுகுறித்து பேசுகிறோம். இந்த ஆட்சி முறையை பா.ஜனதாவினர் தங்களின் சொத்து என்பது போல் கருதுகிறார்கள். இத்தகைய அழுத்தங்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தவறு செய்யாத எங்கள் கட்சி தலைவர்களை நாங்கள் பாதுகாக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்