30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மனு

தற்போது அறிவித்துள்ள போனஸ் ஏமாற்றம் அளிக்கிறது. 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2020-11-06 05:07 GMT
நாகப்பட்டினம், 

நாகை கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 17 ஆண்டுகளாக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று. காலத்தில் பணிபுரிந்து நிதி ஆதாரத்தை பெருக்கி கொடுத்தோம்.

30 சதவீத போனஸ்

கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற வருவாயை ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே வரையறைகளை தளர்த்தி 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சமூக விரோதிகளால் டாஸ்மாக் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவம் குறைந்து காணப்பட்டது. தற்போது இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே முன்பு இருந்தது போல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்