குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

Update: 2020-11-06 13:27 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூரை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வள்ளது. இதுதவிர சமவெளிப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டால் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலைப்பாதையில் உலா வருகின்றன.

மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வரும் காட்டெருமை மக்களை தாக்குவதும், அதனால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வரும் ரெயில் தண்டவாளம் ஓரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள தண்டவாளங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், எந்த விலங்குகள் அதிகளவில் நடமாடுகிறது என்று கேமராவில் பதிவாகும் காட்சி மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைரெயில் பாதையில் காட்டு யானைகள், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இது தொடர்பாக கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்