நல்லம்பள்ளி அருகே லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

நல்லம்பள்ளி அருகே, லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2020-11-06 16:09 GMT
நல்லம்பள்ளி,

லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, நல்லம்பள்ளியை அடுத்த தொப்பூரில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி பகுதியில் நேற்று காலை நல்லம்பள்ளி தாசில்தார் சரவணன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மணி, துணை தாசில்தார் வெண்மணி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 2 பேர் திடீரென தப்பி ஓடிவிட்டனர்.

லாரியை சோதனை செய்ததில் அதில் சுமார் 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு இறக்கி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து நல்லம்பள்ளி தாசில்தார் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர். மேலும் இந்த லாரியில் கடத்தி வரப்பட்ட அரிசி எங்கிருந்து, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றியும், லாரி உரிமையாளர் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்