அரசுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கீழ்வேளூர் அருகே அரசுக்கு சொந்தமான குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-08 11:22 GMT
சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி வடக்குவெளி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொது குளம் உள்ளது. இந்த குளத்தை வடக்குவெளி கிராமத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர், இந்த குளத்தை ஆக்கிரமித்து கழிவு நீரை விட்டதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் குளத்தில் கழிவு நீர் விடுவதை தடுக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

தீக்குளிக்க முயற்சி

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் வடக்குவெளி கிராமத்தில் உள்ள குளத்தை கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அளவீடு செய்தனர். அப்போது தனிநபர்களால் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் குளத்தில் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் மண்எண்ணெய்யை தனது மீது ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண் மீது தண்ணீரை எடுத்து ஊற்றினர். இதை தொடர்ந்து பெண்ணை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், தலைமை சர்வேயர் பாண்டியன், சர்வேயர் மல்லிகா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்